HomeSportsதென் ஆப்பிரிக்கச் சுற்றுப்பயணம்-அந்நிய மண்ணில் ஆதிக்கம் செலுத்துமா இந்தியா?

தென் ஆப்பிரிக்கச் சுற்றுப்பயணம்-அந்நிய மண்ணில் ஆதிக்கம் செலுத்துமா இந்தியா?

வீட்டில் மனைவிக்கு அடங்கி, வெளியில் வீராப்பாய்த் திரியும் கணவன்மார்களைக் கிண்டல் செய்ய வீட்டுல எலி வெளியில புலி எனும் சொற்றொடரைப் பயன்படுத்துவார்கள்.  இந்தியாவுக்கு ஆஸ்திரேலியா, இங்கிலாந்து என எந்த அணி வந்தாலும்  வென்றுவிடும் வல்லமை பெற்ற இந்திய கிரிக்கெட் அணி வெளிநாடுகளுக்குச் சென்றாலோ பெட்டிப்பாம்பாய் அடங்கிவிடும்,அப்படிப்பட்ட இந்திய கிரிக்கெட் அணியை வீட்டுல புலி; வெளியில எலி என்பதே பொருத்தமானது.

வித்தியாசமான காலநிலைகள், வேகப்பந்துவீச்சுக்குச் சாதகமான ஆடுகளங்கள், ரசிகர்கள் ஆதரவு என இதற்குப் பல காரணங்கள் உண்டு. ஒவ்வொரு முறை இந்திய கிரிக்கெட் அணி வெளிநாட்டுப் பயணம் செய்யும்போதும் இந்தமுறை சரித்திரம் படைக்கும் என ரசிகர்கள் நம்புவதும், பின்னர் அது பொய்ப்பதும்தான் வாடிக்கையாக இருக்கிறது. ஆனால் இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் சுற்றுப்பயணம் சென்ற ஆஸ்திரேலியா, இங்கிலாந்து நாடுகளில் டெஸ்ட் தொடரை வென்றது இந்திய அணியின்மீது எதிர்பார்ப்பை உண்டாக்கி இருக்கிறது.

ஒமைக்ரான் வைரஸ் பரவலின் ஆரம்பப் புள்ளி தென் ஆஃப்ரிக்கா என்ற அச்சுறுத்தல் இருந்தாலும், அதைப் புறந்தள்ளி இந்திய கிரிக்கெட் அணி அந்நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது.தென் ஆப்பிரிக்காவுக்குச் செல்லும் இந்திய அணி 3 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி வரும் 17-ம் தேதி ஜோஹன்னஸ்பர்க்கில் தொடங்குகிறது.

இந்திய அணியின் கடந்தகால தென் ஆப்ரிக்கப் பயணங்கள்

இந்திய அணியின் தென் ஆப்ரிக்கச் சுற்றுப்பயணங்கள் எதுவும் வெற்றிகரமாய் இருந்ததில்லை. இன்னும் சொல்லப்போனால் டெஸ்ட் தொடரை அங்கு  இதுவரை  வென்றதே இல்லை.

1992-93 களில் டெஸ்ட் (0-1) மற்றும் ஒரு நாள் (2-5) போட்டித் தொடரை இழந்தது.

1996-97 சுற்றுப்பயணத்தில் 4 டெஸ்ட் போட்டிகளைக்கொண்ட போட்டித்தொடரை ( 0-1 ) இழந்தது.

2001-2 சுற்றுப்பயணத்தில் 2 டெஸ்ட் போட்டிகளைக்கொண்ட போட்டித்தொடரை ( 0-1 ) இழந்தது.

2006-7 சுற்றுப்பயணத்தில் 3 டெஸ்ட் போட்டிகளைக்கொண்ட போட்டித்தொடரை ( 1-2 ) இழந்தது.

2010-11 சுற்றுப்பயணத்தில் 3 டெஸ்ட் போட்டிகளைக்கொண்ட போட்டித்தொடரைச் ( 1-1 ) சமன் செய்தது. 5 போட்டிகளைக்கொண்ட ஒருநாள் போட்டித் தொடரை 2-3 இழந்தது.

2013-14 சுற்றுப்பயணத்தில் 2 டெஸ்ட் போட்டிகளைக்கொண்ட போட்டித்தொடரை ( 0-1 ) இழந்தது. 3 போட்டிகளைக்கொண்ட ஒருநாள் போட்டித் தொடரை 0-2 இழந்தது.

2017-18 சுற்றுப்பயணத்தில் 3 டெஸ்ட் போட்டிகளைக்கொண்ட போட்டித்தொடரை ( 1-2 ) இழந்தது. 6 போட்டிகளைக்கொண்ட ஒருநாள் போட்டித் தொடரை (5-1) வென்றது.

 2017-18 களின் சுற்றுப்பயணத்தில் ஒருதினப்போட்டிகளை வென்றதுதான் அங்கு பெற்ற சிறப்பான தொடர் வெற்றி. அதுதான் தற்பொழுது இந்திய அணியின் மீது ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்திய அணி விவரம்:

விராட் கோஹ்லி (கேப்டன்), ரோஹித் சர்மா (துணை கேப்டன்), கே எல் ராகுல், மயங்க் அகர்வால், சேடேஷ்வர் புஜாரா, அஜிங்க்யா ரஹானே, ஷ்ரேயாஸ் ஐயர், ஹனுமா விஹாரி, ரிஷப் பந்த் (கீப்பர்), விருத்திமான் சாஹா (கீப்பர்), ஆர் அஷ்வின், ஜெயந்த் யாதவ், உமேஷ் யாதவ், முகமது சமி, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், ஷரத்துல் தாகூர், இஷாந்த் சர்மா. 

இந்த அணியில் மயங்க் அகர்வால், ஷ்ரேயாஸ் ஐயர், ஆர் அஷ்வின், ஜெயந்த் யாதவ் உள்ளிட்டவர்கள் நல்ல ஃபார்மில் இருப்பது இந்திய அணிக்கு கூடுதல் வலு சேர்க்கிறது.

மோசமான ஃபார்ம் காரணமாக ஏற்கனவே துணைக்கேப்டனாக இருந்த அஜிங்க்யா ரஹானேவுக்குப் பதில் ரோஹித் சர்மா துணைக்கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.

தென் ஆப்பிரிக்கா அணி விவரம்:

டீன் எல்கர்(கேப்டன்), பவுமா(துணைக் கேப்டன்), குவிண்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), கேகிசோ ரபாடா, ரசீ வான் டெர் டியூசன், பியூரன் ஹென்றிக்ஸ், ஜார்ஜ் லிண்டே, வியான் முல்டர், ஆன்ரிச் நார்ட்யே, கீகன் பீட்டர்சன், சாரெல் எர்வீ, கைல் வெரீனி, மார்கோ ஜேன்சன், கேஷவ் மகராஜ், மார்க்ரம், லுங்கி இங்கிடி, டுவேன் ஆலிவியர், கிளெண்டன் ஸ்டர்மேன், பிரணலன் சுப்ரேயன் , சிசந்தா மகலா, ரியான் ரிக்கிள்டன்.

வேகப்பந்துவீச்சில் அச்சுறுத்தும் கேகிசோ ரபாடா, ஆன்ரிச் நார்ட்யே, லுங்கி இங்கிடி இவர்களோடு, வலது கை வேகப்பந்து வீச்சாளரான டுவேன் ஆலிவியர் 3 ஆண்டுகளுக்குப் பிறகு தென் ஆப்பிரிக்க அணிக்குத் திரும்பியுள்ளது தென் ஆப்பிரிக்காவுக்கு ப்ளஸ்.

மேற்கு இந்தியத் தீவுகளில் டெஸ்ட் தொடரை 2-0 என்று கைப்பற்றிய அணியில் பெரும்பான்மையானவர்கள் இந்திய தொடருக்கான அணியில் தேர்வாகி இருப்பது தென் ஆப்பிரிக்காவுக்குத் தன்னம்பிக்கையை அதிகப்படுத்தக்கூடும்.

தென்னாப்பிரிக்க அணியில் அனுபவம் வாய்ந்த,அச்சுறுத்தக்கூடிய வீரர்கள் அதிகமாக இல்லை என்பதாலும்,இந்திய வீரர்களின் பார்ம் தற்போது சிறப்பாக இருப்பதாலும் இந்தமுறை  எப்படியும் வெற்றி வசமாகும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17,483FansLike
1,312FollowersFollow
4,113SubscribersSubscribe

Most Popular