HomePoliticsஉப்பில்லாக் குழம்பான உணர்ச்சிப்பிழம்பு - வைகோ

உப்பில்லாக் குழம்பான உணர்ச்சிப்பிழம்பு – வைகோ

உணர்ச்சிப் பிழம்பாய், பல எழுச்சிப் பேருரைகளை நிகழ்த்தி, எண்ணற்ற இளைஞர்களைத் தன்பக்கம் ஈர்த்துவைத்திருந்த தமிழத்தின் அரசியல் தலைவர்களில் ஒருவர்தான் வைகோ. திருநெல்வேலி, கலிங்கபட்டியில் பிறந்த இவர், பேரறிஞர் அண்ணா முன்னிலையில் இந்தி எதிர்ப்புக் கருத்தரங்கத்தில் பேசி தனது அரசியல் வாழ்வில் அடி எடுத்து வைத்தவர்தான் வைகோ அவர்கள்.

மூன்று முறை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும், இருமுறை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகவும் பணிபுரிந்தவர். தன் அரசியல் வாழ்வில் பல ஏற்ற இறக்கங்களைச் சந்தித்தவர். இலங்கைக்குப் போய் பிரபாகரனையும் சந்தித்தவர். தமிழகத்தின் முக்கியமான பிரச்சினைகளான முல்லைப் பெரியாறு பிரச்சினை, ஈழத்தமிழர் பிரச்சினை, மீனவர்கள் பிரச்சினை, ஸ்டெர்லைட், மதுவிலக்கு, மீதேன், சீமைக்கருவேல மரம் ஒழிப்பு என பல போராட்டங்களை நடத்தியவர் வைகோ

பலமுறை கூட்டணி மாறுதல், முன்னுக்குப் பின் முரணாகப் பேசுதல், அந்தர்பல்டி அடித்தல், ஆவேசம் கொள்ளுதல், கொந்தளித்தல், குமுறுதல் குலுங்கி அழுதல் என நவரசமும் கொண்ட தலைவர் வைகோ. சாதனைகளையும், சறுக்கல்களையும் நிறைய சந்தித்தவர் வைகோ. பலமுறை பல விமர்சனங்களுக்கும் உள்ளானவர்தான் வைகோ அவர்கள். அவற்றுள் சிலவற்றை இங்கே பார்ப்போம்.

 • திமுகவில் இருந்து கருத்துவேறுபாடு காரணமாக விலகித் தனிக்கட்சி தொடங்கியவர் வைகோ. ‘எங்களைக் காயப்படுத்திய காலம், எங்கள் காயங்களுக்கும் களிம்பு தடவியது’ எனக் கலைஞர் பக்கம் பூங்காற்றாய் திரும்பினார். இனி என் வாழ்நாளில் கலைஞரை எதிர்க்கமாட்டேன். காலம் எனக்குக் கற்றுக்கொடுத்த பக்குவம் இது” என்றவர் அடுத்த சில வருடங்களில் தி.மு.க.வுக்கு எதிராகவே திரும்பி அதிர்ச்சியூட்டினார்.
 • 2009 ல் இலங்கையில் நடந்த போரின் இறுதி மாதங்களில் திமுக காங்கிரசு அரசிலிருந்து விலகவேண்டும் என்று முழங்கினார் வைகோ. ஆனால் தனக்கிருந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை விலக வைக்க முடியாது என்றார். அதற்குக் காரணம் இந்திய அரசியல் வேறு ஈழத்து அரசியல் வேறு என்றார். தக்காளிச் சட்னி, ரத்தம் இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டைப் புரியவைத்தார்.
 • அத்வானியின் காலில் குடும்பத்தோடு விழுவது, சுப்ரமணியசாமியோடு சுமூகமாய் சிரித்தபடியே போஸ் கொடுப்பதௌ என பிரமாதப்படுத்தும் வைகோ, சொந்தக் கட்சிக்காரன் புகைப்படம் எடுக்க அருகில் வந்தால், ‘100 ரூபாய் பணத்தோடு வா எனத்துரத்தி விட்டுத் துன்பியல் சம்பவங்களைச் செய்தார்.
 • ஜெயலலிதாவின் ஊழலை எதிர்த்து நடைபயணம் போனார். பிறகு காலச்சக்கரம் உருண்டு அதே அன்புச்சகோதரி ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்து, ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’ என அனைவரையும் சொல்லவைத்தார்.
 • பா.ஜ.க ஆட்சியில் கூட்டணியில் இருந்த காலங்களில், ‘பொடா’சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தவர் வைகோ. கூட்டணி தர்மத்துக்காக இதைச் செய்ததாகச் சொன்னார். தர்மத்தின் வாழ்வுதனை அவர் ஆதரித்த ‘பொடா’வே கவ்வியது பெருஞ்சோகம்.
 • விரும்பிய எண்ணிக்கையிலான தொகுதிகளை ஜெயலலிதா தரமறுக்க, தன்மானம் தலை தூக்க, “கண்களை விற்றுச் சித்திரம் வாங்குவதைப் போல, சுயமரியாதையை இழந்து பதவி பெறவேண்டிய அவசியம் ம.தி.மு.க வுக்கு இல்லை” என கூடாரத்தைக் காலி செய்தார் வைகோ.
 • விவசாயிகளின் நண்பன் மண்புழு எனக் கேள்விப்பட்டிருப்போம், வைகோவும் விவசாயிகளின் நண்பனாக இருந்து ,அவர்களின் பிரச்சினைகள் தீரும்வரை பச்சைத் தலைப்பாகையை அவிழ்க்க மாட்டேன் சபதம் செய்தார். பிறகொரு நாள், பிரச்சினைகள் தீரவில்லை என்றாலும் தலைப்பாகை இல்லாமல் திரும்பி வந்தார் இந்த தானைத்தலைவன்.
 • இணையதளத்தில் ஏகப்பட்ட கேலி, கிண்டலுக்கு உள்ளாவது வைகோதான். பீடை, லெக் தாதா என்றெல்லாம் அழைக்கப்படுகிறார். கால் வைத்த இடம் விளங்காது என்றும் கேலிக்குள்ளானார். தற்போதைய தமிழக அரசியல் முடிவுகள் சற்றே அதை மாற்றிப் போட்டிருக்கின்றன.
 • என் கட்சியில் வாரிசு அரசியல் இருக்காது என்ற வைகோ, தன் மகன் வையாபுரியை மதிமுகவின் செயலாளராக்கி அழகு பார்த்து அதிர்ச்சியடைய வைத்தார்.
 • மக்கள் நலக்கூட்டணி என்ற ஒன்றை அமைத்து திமுகவின் வெற்றிக்கனவைப் பறித்து, அதிமுகவக்குத் துணைபோனதில் வைகோவிற்குப் பெரும்பங்கு உண்டு.
 • குறிஞ்சான்குளம் படுகொலைகளுக்கோ அல்லது கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்திற்கோ ஒரு இரங்கலைக்கூட தெரிவிக்கவில்லை என்றொரு பிராதும் இருந்துகொண்டுதான் இருக்கிறது.

இப்படியாகப் பல ஏற்ற இறக்கங்கள், குமுறும் எரிமலையாய் இருந்த வைகோவைக் காலம் கொஞ்சம் ஆறப்போட்டிருக்கிறது. வைகோ ஒரு விதை,ஒரு நாளும் அது உறங்காது என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்!

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17,483FansLike
1,311FollowersFollow
4,113SubscribersSubscribe

Most Popular