HomeGovernment Schemesபிரதான் மந்திரி சுரக்‌ஷா பீமா யோஜனா | மாதம் ஒரு ரூபாய் செலவில் மகத்தான காப்பீடு

பிரதான் மந்திரி சுரக்‌ஷா பீமா யோஜனா | மாதம் ஒரு ரூபாய் செலவில் மகத்தான காப்பீடு

ஒரு தனிநபருக்கும் ஒரு காப்பீட்டு நிறுவனத்திற்கும் இடையே போடப்படும் ஓர் ஒப்பந்தமே காப்பீடு எனப்படுகிறது.இந்த ஒப்பந்தத்தின் கீழ், பாலிசிதாரர் பணத்தைச் செலுத்தவேண்டும். அசம்பாவிதம் எதுவும் நிகழ்ந்தால் உறுதியளிக்கப்பட்ட தொகையைக் காப்பீட்டு நிறுவனம் வழங்கும்.இதுதான் காப்பீடு என்பதன் சாரம்சம்.

அடுத்த நொடி ஒளித்து வைத்திருக்கும் ஆச்சரியங்கள் இவ்வுலகத்தில் ஏராளம் உண்டு என்பது ஒரு பிரபலமான சொற்றொடர்.எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் எனும் நிலையற்ற உலகில் காப்பீடு என்பது இன்றியமையாதது. ஆனால் பலர் காப்பீடு பற்றி யோசிப்பதே இல்லை.

பிரிமியத் தொகையை நினைவு வைத்துச் செலுத்த முடியாமை, காப்பீட்டுத் தொகையைக் கட்ட இயலாத அளவிற்கு பொருளாதாரம் இல்லாமை, அலட்சியம், பிறகு பார்த்துக்கொள்ளலாம் எனத் தள்ளிப்போடுதல் என ஒவ்வொருவருக்கும் காப்பீடு எடுக்காததற்குக் காரணங்கள் பல இருக்கும். மேற்கூறிய காரணங்கள் யாவையும் களைந்து, காப்பீடு என்பதை மிகவும் எளிதாக்கிய மிக முக்கியமான ஒரு திட்டம்தான் பிரதான் மந்திரி சுரக்‌ஷா பீமா யோஜனா. ஏழை எளிய மக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் அமைந்த இத்திட்டத்தைப் பற்றிய சில தகவல்களைக் காண்போம்.

மாதம் ஒரு ரூபாய் செலவில் மகத்தான காப்பீடு

பிரதான் மந்திரி சுரக்‌ஷா பீமா யோஜனா என்பது விபத்து காரணமாக ஏற்படும் இறப்பு அல்லது உடல் ஊனத்திற்கு எதிராக வழங்கப்படும் ஒரு காப்பீட்டு திட்டம் ஆகும். இந்தத் திட்டம் மூலம் 18 முதல் 70 வயது வரை உள்ள தனிநபர்கள் பயன்பெறலாம். இந்தத் திட்டத்தின் கீழ் இறப்பிற்கு ரூ 2 லட்சமும், உடல் ஊனத்திற்கு ரூ 1 லட்சமும் இழப்பீடாக வழங்கப்படுகின்றது.

மாதம் ஒன்றிற்கு ஒரு ரூபாய் மட்டும் செலவு செய்தாலே போதுமானது என்பதுதான் இதன் தனிச் சிறப்பு. அதாவது ஒரு ஆண்டுக்கு நீங்கள் செலுத்தவேண்டிய தொகை வெறும் 12 ரூபாய் மட்டுமே. இதனால் ஏழை,எளியோர் அனைவருக்கும் பயன்படக்கூடிய அற்புதத் திட்டம் இது என்றே சொல்லலாம்.

விண்ணப்பிக்கும் வழிமுறை

பிரதான் மந்திரி சுரக்‌ஷா பீமா யோஜனா திட்டத்தில் சேர நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியை அணுகி, இதற்கான படிவத்தை பூர்த்தி செய்து சம்ர்ப்பிக்க வேண்டும். அனைத்து முன்னணி வங்கிகளும் இந்த திட்டத்தைச் செயல்படுத்துகின்றன.

பிரிமியத்தொகையைச் செலுத்தும் முறை

மற்ற காப்பீடுகளைப் போன்று பிரீமியம் தொகையை எங்காவது சென்று செலுத்தவேண்டும் என்ற சிரமமில்லை. உங்களுடைய வங்கிக் கணக்கிலிருந்து இந்தத் தொகையானது தானாக பிடித்தம் (ஆட்டோ டெபிட்) செய்யப்படும்.இது எளிதான முறையில் அனைவரும் காப்பீடு எடுக்க உதவியாய் இருக்கிறது. நீங்கள் கூட்டு வங்கிக் கணக்கு வைத்திருப்பவர் எனில் கணக்கு வைத்திருக்கும் ஒவ்வொருக்காகவும் வருடத்திற்கு 12 ரூபாய் பிடித்தம் செய்யப்படும்.

பலன்கள்

எதிர்பாராத விபத்தினால் இறக்க நேர்ந்தால் ரூ 2 லட்சம் வழங்கப்படுகிறது. இரண்டு கண்களை அல்லது கைகளை அல்லது கால்களை இழப்பது அல்லது ஒரு கண்ணில் பார்வைத் திறனை நிரந்தரமாக இழப்பது அல்லது கை அல்லது காலை பயன்படுத்த இயலாமல் தவிப்பது போன்றவற்றிற்கு இழப்பீடாக ரூ 2 லட்சம் வழங்கப்படுகிறது. ஒரு கண் அல்லது அல்லது ஒரு கை அல்லது ஒரு காலை இழப்பது போன்ற இழப்புகளுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படுகிறது.

வங்கியில் கணக்கு வைத்திருக்கும் அனைவரும் தவறாது சேரவேண்டிய அற்புதமான திட்டம் இந்த பிரதான் மந்திரி சுரக்‌ஷா பீமா யோஜனா. மாதம் ஒரு ரூபாய் மட்டுமே செலவழித்து பெறக்கூடிய மகத்தான காப்பீட்டுத் திட்டம் இது. ஏழைகளுக்கு ஏற்ற ஈடு இணையற்ற காப்பீட்டுத் திட்டம் இதுவென்றால் அது மிகையல்ல!

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17,483FansLike
1,334FollowersFollow
4,113SubscribersSubscribe

Most Popular