HomeFoodஷவர்மா- பிரியமான கோழி!

ஷவர்மா- பிரியமான கோழி!

ஷவர்மா  இந்தப் பெயரைக் கேட்டதுமே பலருக்கும் இது நாவின் சுவை நரம்புகள் மீட்டப்பட்டுஒரு புத்துணர்வு உண்டாகும். அரேபியர்களின் உணவான இது இப்பொழுது அனைத்து நாட்டு மக்களாலும், குறிப்பாக இளம் தலைமுறையினரால் விரும்பப்படும் உணவாகி இருக்கிறது. தமிழகத்திலும் பெரும்பாலான இடங்களில் கிடைக்கிறது, விரும்பி உண்ணும் புதிய வாடிக்கையாளர்களும் அதிகமாகி இருக்கிறார்கள்

அரேபிய மொழியில் ஷவர்மா என்ற சொல்லுக்கு திரும்புதல் என்று பொருள். தீ இருக்கும் பக்கமாக இறைச்சியைத் திருப்பி, திருப்பிச் சுடுவதால் இந்தப் பெயர் வந்திருக்கக் கூடும். ஆதிகாலத்தில் ஷவர்மா குறும்பாடு, மாடு, வான்கோழி இவற்றின் இறைச்சி கொண்டு செய்யப்பட்டது. பின்னர்தான் இது கோழி இறைச்சியை பயன்படுத்தி செய்யப்படுகிறது. இதன் பூர்வீகம் துருக்கி என்கிறார்கள். பின்னர்தான் இது மத்திய கிழக்கு நாடுகளான அரபு நாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளது.

இதன் செய்முறை எப்படி என்று பார்த்தால், கோழி இறைச்சியை நன்கு சுத்தம் செய்து, எலும்புகள் மற்றும் கடினமான பகுதிகள் இவற்றை நீக்கி மஞ்சள், சிலபல மசாலாக்கள் தடவி ஊற வைக்கிறார்கள். அடிப்புறத்தில் ஒரு தட்டு போலவும் நீண்ட கம்பியின் மேல்முனை கூர்மையாகவும் உள்ள ஒரு பெரிய சுழலும் கம்பியில் ஏகப்பட்ட கோழிகளை ஒன்றாக குத்தி குட்டி வைக்கிறார்கள்.

மஞ்சள்வண்ண இறைச்சி,கூம்பு வடிவம் கொண்டு தலைகீழாக தொங்குகிறது. மேல்முனையில் வெளிச்சுற்றளவு அதிகமாகவும் கிழே செல்லச்செல்லசுற்றளவு குறைந்து மாபெரும் குல்ஃபி ஐசைத் தலைகீழாகக் கவிழ்த்தது போல் காட்சியளிக்கிறது. இந்த இறைச்சிக் கோபுரத்தைத் தீ இருக்கும் பக்கமாய்ச் சுழற்றிச் சுழற்றிச் சுட்டெடுக்கிறார்கள். வெந்துவிட்டதைஅதன் வாசம் காட்டிக்கொடுக்கிறது. மசாலாக்களுடன் கலந்த கோழியிறைச்சி பஞ்சுபோல் வெந்து பக்குவமாய் இருக்கும் பதம்பார்த்து நீண்ட கத்தி, கரண்டி துணைகொண்டு சீவி எடுக்கிறார்கள். அதைப் பார்ப்பதே பரவசம்தான். குட்டியாக சீவப்பட்ட இறைச்சியை மேலும் குட்டியாக நறுக்குகிறார்கள். சிறிதாகவெட்டப்பட்ட தக்காளி, முட்டைகோஸ் சேர்த்து சிறிதாய் நறுக்கிய கோழி இறைச்சியையும் கலக்கிறார்கள். இவ்வாறாக ஷவர்மாவின் முக்கிய பகுதி தயாராகிவிடுகிறது.

மயானிஸ் என்று சொல்லப்படும் சுவைகூட்டியை ஒரு கொத்தனார் சுவற்றில் சிமெண்ட் பூசும் லாவகத்தோடு சப்பாத்தி வடிவ கபூஸ் எனப்படும் பிரட்டில் தடவுகிறார்கள். இரண்டு வெண்மைநிறச் சப்பாத்திகளை ஒட்டியது போன்ற அமைப்புடையது அந்த கபூஸ். அதில் மயானிஸ் தடவி, அதன்மேல் இந்த சிக்கன், காய்கறிக் கலவையை வைத்து அதை, பாயைச் சுருட்டுவதைபோல் சுருட்டி வைத்து, அதைப் பேப்பரில்ரோல்செய்துருசிக்க தருகிறார்கள். சிக்கன்பிரியர்களுக்கு இது ஒரு சுடப்பட்ட சொர்க்கம். இதற்குத் தொட்டுக் கொள்வதற்குக் வினிகரில் ஊற வைத்த பச்சை மிளகாய்,   முள்ளங்கி, கேரட், பீட்ரூட் ஊறுகாய்  தருகிறார்கள்.

பதமாக பஞ்சுபோல இருக்கும் கோழி இறைச்சியுடன் முட்டைக்கோஸ், தக்காளி போன்றவற்றின் சங்கமம் நாவில் நர்த்தனம் ஆடும்பொழுது அந்த ஊறுகாயை ஒரு கடி.. என நினைத்தாலே நாவூற வைக்கிறது அதன் சுவை.

இது ஒரு அடிப்படையான செய்முறையே.நாட்டுக்கு நாடு,ஊருக்கு ஊர் கடைக்குக்கடை இதன் செய்முறை சிறு அளவிலேனும் மாறுபடத்தான் செய்கிறது.ப்ரென்ச் ப்ரைஸ் எனப்படும் உருளைக் கிழங்கு வறுவலைச் சேர்க்கும்போது அது ஒரு வித்தியாசமான சுவையையும் கொடுக்கிறது. மசாலாக்களில் மாறுதல், வெண்ணெய், சீஸ் சேர்த்தல் என பல்வேறு வகைகளில் வேறுபட்ட சுவைகளில் கிடைக்கின்றன.

சைவத்திலும் சுவையான ஷவர்மா கிடைக்கிறது. கொண்டைக்கடலையை ஊறவைத்து அரைத்து அதனுடன் கீரையை வைத்து தயார் செய்த வடை போன்ற அமைப்பிலான பிலாபில் என்றொரு பதார்த்தம் அரபு நாடுகளில் உண்டு. கோழி இறைச்சிக்குப் பதிலாக இதைப் பயன்படுத்தி சைவ ஷவர்மா செய்யப்படுகிறது. ஷவர்மா என்றாலே நினைவுக்குவருவது சிக்கன் ஷவர்மாதான். இதற்குத்தான் உலகெங்கிலும் பரந்துபட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். பிரியமான தோழியோடு இந்த பிரியமான கோழியும் இருந்துவிடுவது ஒரு சுகானுபவம்தான்.

இக்கட்டுரையின் ஆரம்பத்தில் கண்டோமல்லவா, ஷவர்மா என்ற அரபுச் சொல்லுக்கு திரும்புதல் என்று பொருளென்று. ஒருமுறை உண்டவர்கள் திரும்பத் திரும்ப உண்பதாலும் அந்தப் பெயர் வந்திருக்கலாமோ என்ற ஐயம் மனதில் நமக்கு எழத்தான் செய்கிறது!

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17,483FansLike
1,312FollowersFollow
4,113SubscribersSubscribe

Most Popular