HomeFoodகண்டதும் சுவைக்கத் தூண்டும் கல்யாண முருங்கை பூரி | மதுரை உணவுகள்

கண்டதும் சுவைக்கத் தூண்டும் கல்யாண முருங்கை பூரி | மதுரை உணவுகள்

ஒவ்வொரு மதத்தினருக்கும் ஒரு புனிதத்தலம் இருக்கும், ஒருமுறையாவது அங்கு செல்லவேண்டும் என்பது அவர்களின் வாழ்நாள் குறிக்கோளாக இருக்கும். தமிழ்நாட்டு உணவு பிரியர்களுக்கு அதுபோல் ஒரு தலம் உண்டு என்று சொன்னால் அது மதுரையைச் சொல்லலாம். மதுரைக்கு வந்து விதவிதமாய்ச் சாப்பிடும் தமிழகத்தின் உணவுத் தலைநகர் மதுரை என்று சொன்னாலும் அதில் தவறொன்றும் இருக்க வாய்ப்பில்லை.

மதுரை, சங்கத்தமிழுக்கு மட்டுமல்ல சாப்பாட்டுக்கும் புகழ்பெற்ற ஊர். உணவில் பல புதுமைகளைப் புகுத்துவதில் மதுரையர்களுக்கு ஈடு அவர்களேதான். வகை வகையான அசைவ உணவுகளை மண் மணக்கும் பாரம்பரிய சுவையோடு பரிமாறும் உணவகங்களும் இங்கு அதிகம் உண்டு. ஆட்டுக்கறியை இத்தனை வகையில் சமைக்க இயலும் என்பது மதுரையில் உண்டு மகிழ்ந்தவர்களுக்குத்தான் தெரியும். விதவிதமான உணவுகள் உணவகங்களில் மட்டுமல்ல தெருக்களில், தள்ளுவண்டிகளில் அதைவிட அதிகமாய் உணவுப் பொருட்கள் கிடைக்கின்றன. அப்படி ஒரு சுவையான கல்யாண முருங்கைபூரி அல்லது முள்ளு முருங்கைப் பூரியைப்பற்றித்தான் இன்று பார்க்கப்போகிறோம்.

மதுரை மீனாட்சியம்மன் கோவிலைச் சுற்றியுள்ள தெருக்களை மாலைநேரத்தில் ஒரு முறை வலம் வந்தால், நீங்கள் பல தள்ளுவண்டிகளைப் பார்க்கலாம். அந்தத் தள்ளுவண்டிகளில் இருந்து பூரிகளைப் பொரிக்கும் வாசம் வந்துகொண்டு இருக்கும். அதைச் சுற்றி மக்கள் கூட்டமாய் நின்று சுவைத்துக் கொண்டிருப்பார்கள்.இந்தக்காட்சியை மதுரையின் பிரபலமான,பரபரப்பான எல்லாத் தெருக்களிலும் பார்க்கலாம்.

கொஞ்சம் நெருங்கிவந்து பார்த்தோமானால், அந்த வண்டியில் ஒரு எண்ணெய்ச் சட்டி சூடாய் இருக்கும். பச்சைவண்ண மாவு ஒன்றை வெகு லாவகமாக, விரைவாக, ஒரே அளவில் உருண்டைகளாக உருட்டி, பாலீதீன் கவர், வாழை இலை அல்லது ஈரத்துணியின்மேல் வைத்துத் தட்டி கொதிக்கும் எண்ணெயில் போடுகிறார் தள்ளுவண்டி கடைக்காரர். எண்ணெய் சட்டியில் போட்டதும் பாணி பூரியைவிட கொஞ்சம் பெரிதாய் விஸ்வரூபம் எடுக்கிறது பச்சை வண்ண பூரி. பொரித்து எடுத்ததும் பூரிக்குமேல் பொடிச்சாரல் தூவுகிறார் கடைக்காரர். ஆக்கப் பொறுத்த மக்கள் ஆறப் பொறுக்காமல் சுவைக்கின்றனர். மேலே மொறுமொறுவென்றும் உள்ளே மென்மையாகவும் பதமான உப்பு, காரத்தோடு மூலிகையின் நற்குணங்களைக்கொண்ட இந்தப் பூரிகள் பானிபூரிக்கு அண்ணன், சோலாப்புரிக்குத் தம்பியை போன்ற வடிவம் உடையவை. சூடு ஆறும் முன்னரே விற்றுவிடுவதால் எப்பொழுது போய்க் கேட்டாலும் பூரிகள் உடனே கிடைக்காது. சுவையான அந்தக் காத்திருப்புக்குப்பின் புதிதாகப் பொரித்தெடுத்துச் சுடச்சுடக் கிடைக்கின்றன இந்த பச்சைப் பூரிகள்.விலையும் ஒன்றும் அதிகம் இல்லை,4 பூரிகள் 10 ரூபாய்க்குக் கிடைக்கின்றன.
அது என்ன கல்யாண முருங்கை அல்லது முள்முருங்கை பூரி? கல்யாண முருங்கை என்பது மருத்துவ குணங்கள் நிறைந்த ஒரு தாவரம்.

உடல்சூடு தணிக்க, சளித்தொல்லை நீங்க,கர்ப்பம் சம்பந்தமான பிரச்சனைகளை நீக்க,எடை குறைக்க,முடி நரைக்காமல் இருக்க எனப் பல வகைகளிலும் கணக்கில்லாப் பலன்கள் தருவதுதான் கல்யாண முருங்கை அல்லது முள் முருங்கை எனப்படும் தாவரம். இதன் இலையை அரிசியோடு சேர்த்து அரைத்து செய்யப்படுவதுதான் இந்த முள்முருங்கை பூரி. இதன் சுருக்கமான செய்முறையைப் பார்ப்போம்.

இட்லி அரிசி மற்றும் பச்சரிசியை சம அளவில் எடுத்து ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். பின்னர் தண்ணீரை வடித்து அதனுடன் முள் முருங்கை இலை, காய்ந்த மிளகாய், சீரகம், மிளகு, பூண்டு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து இட்லி மாவு பதம் அல்லது கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். பதம் வரவில்லையென்றால் அரிசிமாவைச் சேர்த்துக்கொள்ளலாம். பின்னர் எண்ணெய் சட்டியைக் காயவைத்து, அரைத்த மாவை சிறு சிறு பூரிகளாக எண்ணெய் தடவிய இலையில் தட்டி எண்ணெயில் பொரித்து எடுத்து பரிமாறவும். கெச்சப் என்பதெல்லாம் இதற்குக் கூடா நட்பு, அவை கேடில்தான் முடியும். இதற்குத் தொட்டுக்கொள்ள இட்லிமிளகாய்ப் பொடி அல்லது பருப்புப் பொடிதான் சிறப்பாக இருக்கும்.

மூலிகைகளை நிறைய சேர்த்துக்கொள்வது உடலுக்கு நல்லது. அதைச் சாறாகக் குடிப்பதற்கெல்லாம் சாத்தியம் இல்லாத இன்றைய பரபரப்பான வாழ்க்கைமுறையில் அதற்கெல்லாம் நேரம் இல்லாதபோது இதுபோன்று எளிதில் கிடைப்பவற்றைச் சேர்த்துக்கொள்வதுதானே புத்திசாலித்தனம்.குளிர்வீசும் மாலைநேரத்தில் சூடான இப்பூரியை ஆவிபறக்க உள்ளே தள்ளிப்பாருங்கள். சுவையில் சொக்கிப்போவீர்கள்.மறுமுறை இதற்காகவே மதுரை வருவீர்கள்!

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17,483FansLike
1,312FollowersFollow
4,113SubscribersSubscribe

Most Popular