HomeCinemaஇது அதுல்ல?! – ஒரே கதையமைப்புள்ள தமிழ்ப்படங்கள்

இது அதுல்ல?! – ஒரே கதையமைப்புள்ள தமிழ்ப்படங்கள்

அயல்நாட்டுப் படங்களைக் காப்பியடிப்பது அல்லது இன்ஸ்பிரேஷனில் அல்லது தழுவிப் படம் எடுப்பது அல்லது உல்டா செய்வது என்பது பன்னெடுங்காலமாகவே நடைபெற்றுக்கொண்டுதான் வருகிறது. காட்பாதர் படம் கமல் நடித்த நாயகன் என்றானது, மிசஸ் டவுட்ஃபையர் எனும் படம், அவ்வை சண்முகியானது, சன்ஃப்ளவர் என்றொரு ரணகளத்தில் கணவனைத் தேடும் படம் தமிழில் ரோஜாவானது என நிறைய உதாரணங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம்.

அந்தக்காலத்தில் ஹிந்திப்படங்கள் உள்ளிட்ட பிறமொழிப் படங்கள் தமிழில் காப்பியடிக்கப்பட்டன. பல வெற்றிப்படங்களும் இதில் அடக்கம். வேற்றுமொழிப் பாடல்கள் கூட தமிழில் காப்பியடிக்கப்பட்டன. படத்தின் பாடல்கள் மட்டுமல்ல சண்டைக்காட்சிகள், நடனம் என அனைத்துத் துறைகளும் அச்சு அசலாக காப்பியடிக்கப்பட்ட படங்கள் நிறைய உண்டு. கோல்மால் என்ற  ஹிந்திப்படம் தமிழில் பாலச்சந்தர் இயக்கி,ரஜினிகாந்த் நடித்த தில்லுமுல்லு என்றானது.மணிச்சித்திர தாழ் எனும் மலையாள படம் சந்திரமுகியாகி தமிழில் சக்கைபோடு போட்டது.

இவையெல்லாம் கூட தழுவல். உத்வேகம் (இன்ஸ்பிரேஷன்) இதனால் காப்பியடிக்கப்பட்டன என சொல்லிக் கொள்ளலாம். ஆனால் தமிழ்ப்படங்களைப் பார்த்தே தமிழ்ப் படங்கள் எடுக்கப்பட்டால்? ஒரே கதையமைப்புள்ள சில படங்களைப் பற்றித்தான் இன்று பார்க்கப்போகிறோம்.

$ads={1}கோபுரங்கள் சாய்வதில்லை – சின்ன வீடு

பொருத்தமில்லாத திருமணம், மனதுக்குப் பிடிக்காத மனைவி, திருமணம் நடந்ததையே மறைக்கும் கணவன், அவனுக்கு இன்னொருத்தி மீதான காதல் வாழ்க்கை இதனால் ஏற்படும் சிக்கல் எனும் கதையமைப்பைக் கொண்டு எடுக்கப்பட்டதுதான் இந்த இருபடங்களும். இரண்டுமே வெற்றிப்படங்கள் என்பது குறிப்பிடத்தக்கவை.

தில்லானா மோகனாம்பாள் – கரகாட்டக்காரன் – சங்கமம்

இருவேறு கலைகளில் புகழ்பெற்ற கதாநாயகன் கதாநாயகி, அவர்களுக்குள் வரும் காதல், எதிர்ப்புகள் இந்தக் களத்தை மையமாகக் கொண்டதுதான் தில்லானா மோகனாம்பாள், கரகாட்டக்காரன் மற்றும் சங்கமம்.

நலந்தானா..நலந்தானா..உடலும் உள்ளமும் நலந்தானா என்றொரு பாடல் தில்லானா மோகனாம்பாள் படத்தில் உண்டு.சவுக்கியமா கண்ணே சவுக்கியமா என்றொரு பாடல் சங்கமம் படத்தில் உண்டு என்பது இதில் கவனிக்கவேண்டிய ஒன்று.

இன்றுபோய் நாளை வா- கண்ணா லட்டு தின்ன ஆசை

மூன்று நண்பர்கள்,ஒரு பெண். இவர்களுக்குள் நடக்கிற கலகலப்பான காதல் கண்ணாமூச்சிதான் இரு படங்களுக்குமான கதையமைப்பு. பாக்யராஜ் நடித்த இன்றுபோய் நாளை வா படமும் சரி, சந்தானம் நடித்த கண்ணா லட்டு தின்ன ஆசையும் சரி, வயிறுகுலுங்க சிரிக்கவைத்ததில் இரண்டு படங்களுமே வெற்றி பெற்றவை.

மௌன ராகம் – ராஜா ராணி

மணிரத்னம் இயக்கிய மௌன ராகம், அட்லி இயக்கிய ராஜா ராணி இரண்டுமே புரிந்துணர்வு இல்லாத கணவன் மனைவி பற்றிய கதை. காலத்திற்கு ஏற்றவாறு புதுமைகள் செய்து வெளியாகி வெற்றிபெற்றதுதான் ராஜா ராணி.

மௌன ராகம் படமே நெஞ்சத்தைக்கிள்ளாதே படத்தின் கதையைப் போன்றது என்பது குறிப்பிடத்தக்கது.

சிகப்பு ரோஜாக்கள்-மன்மதன்

இளம் பெண்களை தேடிக்கொல்லும் சைக்கோ கொலைகாரன் என்பதுதான் இந்த இரு படங்களின் மையக்கதை. முன்னவர் பெண்கள் சமாதியில் பூ வைப்பார், பின்னவர் சாம்பலைச் சேகரிப்பார். ‘சிகப்பு ரோஜாக்கள்’, தமிழ் சினிமாவில் வெளியான நம்பர் ஒன் த்ரில்லர்களுள் ஒன்று.மன்மதன் சிம்புவின் குறிப்பிடத்தக்க படங்களுள் ஒன்று.

பூவெல்லாம் கேட்டுப்பார் – ஜோடி,

16 வயதினிலே-டார்லிங் டார்லிங் டார்லிங்,

மெர்சல் – அபூர்வ சகோதரர்கள்,

தெறி-சத்ரியன்,

மூடுபனி- காதல் கொண்டேன் என இந்த பட்டியல் நீண்டுகொண்டே செல்லும்.

அந்தக்காலத்தில் வெளிநாட்டுப் படங்களை மக்கள் பார்ப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. இந்தப் படங்களையெல்லாம் VCD ல் பார்க்கும் வசதிஉள்ளவர்கள் மட்டுமே பார்த்துவந்தனர். ஆனால் இப்பொழுது நிலைமை வேறு.

எங்கிருந்து எவை சுடப்பட்டாலும் அவை இணையத்தில் உடனே நெட்டிசன்களால் கண்டுபிடித்து பகிரப்படும். காப்பியோ, தழுவலோ, உல்டாவோ, ரீமேக்கோ அத்தை விறுவிறுப்பாக, போரடிக்காமல், சுவராசியமாகத் தந்தால் ரசிகர்கள் கொண்டாடத்தான் செய்வார்கள் என்பதற்கு இத்தகைய படங்கள் வெற்றிபெறுவதே சாட்சி!

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17,483FansLike
1,312FollowersFollow
4,113SubscribersSubscribe

Most Popular